உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கீழக்கரை தொதல் அல்வாவிற்கு புவிசார் குறியீடு... கிடைக்குமா; தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மையம் விண்ணப்பம்

 கீழக்கரை தொதல் அல்வாவிற்கு புவிசார் குறியீடு... கிடைக்குமா; தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மையம் விண்ணப்பம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பாரம்பரிய முறையில் தொதல் (கருப்பு) அல்வா தயார் செய்து இந்தியா மட்டுமின்றி அயல் நாடுகளுக்கும் செல்கிறது. இதற்கான புவிசார் குறியீடு பெறவதற்கு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் காப்புரிமை தகவல் மையம் விண்ணப்பம் செய்துள்ளது. கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக அதுவும் அண்டை நாடான இலங்கையை பாரம்பரியமாக கொண்ட தொதல் (கருப்பு) அல்வா ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பாரம்பரிய முறையில் தயார் செய்து இந்தியா மட்டுமின்றி அயல் நாடுகளுக்கும் செல்கிறது. திருநெல்வேலி அல்வா போல ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தொதல் அல்வா உலகப்புகழ் பெற்றுள்ளது. உருவான கதை தொதல் என்பது இலங்கைச் சோனகர் சமையலில் இடம் பெறும் ஒரு இனிப்பு வகை உணவு. இது இலங்கையின் தென் மாகாணம் யாழ்பாணத்தில் தோன்றியதாக கூறுகின்றனர். இதனை பச்சரிசி, தேங்காய், சீனி, பயறு, முந்திரி, ஏலக்காய் பயன்படுத்தி செய்கின்றனர். யாழ்பாணத்தில் தொதல் அல்வா சர்க்கரை கழி என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள மக்கள் களுதொதல் என்பார்கள். பனங்கருப்பட்டியை தொதலுக்கு பயன்படுத்துவார்கள். அயல்நாடு பறக்கும் அல்வா இத்தகையை வரலாற்றை கொண்ட தொதல் அல்வா தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில், குறிப்பாக கீழக்கரையில் பாரம்பரிய முறை அறிந்து அதன் வழி முறையில் செய்து வருவதால் தொதல் அல்வா கடல் கடந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக கீழக்கரை தெருக்களில் இன்றும் தொதல் அல்வாவின் மணம் வீசுகிறது. குடிசைத்தொழிலாகவும், சில குடும்பங்கள் குலத்தொழிலாகவும் செய்கின்றனர். சுவையும், தரமும் மிக்க இந்த இனிப்பு பதார்த்தம் உலகில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி அவர்களுடன் பழகும் நண்பர்களுக்கும் பிடித்தமான பலகாரமாகிவிட்டது. சதுரம், செவ்வகம், டைமண்ட், நீள் சதுரம் என பல வடிவங்களில் தொதல் அல்வா ஒரு கிலோ ரூ.340 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது. செய்முறை நாட்டு கருப்பட்டியை பாகுவாக காய்ச்ச வேண்டும். தேங்காய் பால் ஊற வைத்த சவ்வரிசி, மைதா எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் வடைசட்டியை நன்றாக காயவைத்து தேங்காய் பால் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். அதன் பிறகு சவ்வரிசியை (மிஷினில் அரைத்ததை) சேர்க்க வேண்டும். இடைவிடாமல் கிளற வேண்டும். கருப்பட்டி பாகுவை சேர்த்தவுடன் நிறம் மாறிவிடும். தொடர்ந்து கிளறிவிட வேண்டும். கடைசியாக மைதா பாலை ஊற்ற வேண்டும். தொடர்ந்த மூன்று மணி நேரம் வரை தொடர்ந்து பதம் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அதன் பிறகு செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். கையில் ஓட்டாமல் இருக்கவும், வாசனைக்கு முந்திரி, ஏலக்காய் பொடி போட்டு மீண்டும் 5 முதல் 10 நிமிடம் வரை கிளிறி விட வேண்டும். இவ்வாறு சுடச்சுட தொதல் அல்வா தயாரிக்கலாம். இதுகுறித்து கீழக்கரையைச் சேர்ந்த வியாபாரி கே.எஸ். ஜாகிர் உசேன் கூறுகையில், இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளிநாடுகளுக்கு தொதல் அல்வா செல்கிறது. அங்குள்ள மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். பாரம்பரிய கீழக்கரை தொதல் அல்வாவிற்கு புவிசார் குறியீடு கேட்டு புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் காப்புரிமை தகவல் மையம் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முண்டு மிளகாய்க்கு வழங்கியுள்ளது போல் கீழக்கரை தொதல் அல்வாவிற்கும் விரைவில் புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ