உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / போதையில் மட்டையான கண்டக்டர் சஸ்பெண்ட் பாதி வழியில் பரிதவித்த பயணியர்

போதையில் மட்டையான கண்டக்டர் சஸ்பெண்ட் பாதி வழியில் பரிதவித்த பயணியர்

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பணிமனையிலிருந்து காவேரிப்பாக்கம், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.காவேரிப்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, சோளிங்கருக்கு நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு புறப்பட வேண்டிய அரசு டவுன் பஸ், பஸ் ஸ்டாண்டிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.கண்டக்டர் சிவக்குமார் போதையில் இருந்ததால், டிரைவர் பஸ்சை எடுக்கவில்லை. பயணியர் கூச்சலிடவே, வேறு வழியின்றி டிரைவர், 3:40 மணிக்கு பஸ்சை இயக்கினார்.பெரும்பாலும் பெண் பயணியர், மாணவ - மாணவியர் என, 70 பேர் பயணித்தனர். கண்டக்டர் யாருக்கும் டிக்கெட் வழங்கவில்லை.பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு, பஜார் வழியாக, சோளிங்கர் நோக்கி பஸ் சென்றது. இதற்கிடையே போதை தலைக்கேறிய நிலையில், சிவக்குமார், சோளிங்கர் மாங்காளியம்மன் கோவில் அருகே டிரைவரிடம் பஸ்சை நிறுத்துமாறு கூறியுள்ளார்.பஸ் நின்றதும், கோவில் வளாகத்தில் படுத்து துாங்கி விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணியர், பாதி வழியில் பரிதவித்தனர். பின், சிவக்குமாரை பஸ்சில் துாக்கி போட்டு, பயணியர் இல்லாமல் சோளிங்கருக்கு டிரைவர் பஸ்சை ஓட்டிச் சென்றார். இதனால், 5:30 மணிக்கு அந்த பஸ் காவேரிப்பாக்கம் செல்ல வேண்டிய பயணம் ரத்து செய்யப்பட்டது. தகவலறிந்த, வேலுார் அரசு மண்டல போக்குவரத்து பொது மேலாளர், கண்டக்டர் சிவக்குமாரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி