பஞ்., செயலருக்கு எதிராக தி.மு.க.,வினர் போஸ்டர்
தர்மபுரி, தர்மபுரி அருகே, தி.மு.க., நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யாமல், பஞ்., பணிகளை செய்வதால், பஞ்., செயலரை இடமாற்றம் செய்ய, தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.தர்மபுரி தாலுகா அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலக பகுதி சுவர்களில், நேற்று, தர்மபுரி ஒன்றியம், வெள்ளாளப்பட்டி பஞ்., செயலர் தன்ராஜை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், 'வெள்ளாப்பட்டி பஞ்., செயலர் தன்ராஜ் கடந்த, 25 ஆண்டுகளாக ஒரே பஞ்.,ல் பணியாற்றுவதால், பஞ்., வளர்ச்சி முடங்கியுள்ளது. பஞ்., வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் கலந்து ஆலோசனை செய்யாமல், தன்னிச்சையாக செயல்படுவதால், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும்' என்ற, வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.இது குறித்து, போஸ்டர் ஒட்டிய, வெள்ளாளப்பட்டி, தி.மு.க., கிளை நிர்வாகியும், சனத்குமார் ஆறு பாசன விவசாயிகள் சங்க தலைவருமான கந்தசாமி கூறுகையில், ''வெள்ளாளப்பட்டி பஞ்., செயலர் தன்ராஜ், கிராமங்களுக்கு வரும் பணிகளை, அவரே, தனி நபர் மூலம் எடுத்து செய்கிறார். பஞ்., வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, பொதுமக்கள் மற்றும் ஆளுங்கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசிப்பதில்லை. இதனால் பஞ்.,க்கு கூடுதலாக திட்டங்கள் கொண்டு வரும், எங்களை போன்ற நிர்வாகிகளால், எதுவும் செய்ய முடியாமல் போகிறது,'' என்றார்.பஞ்., செயலர் தன்ராஜ் கூறுகையில்,''எங்கள் பஞ்.,ல் இதுவரை யாரும் என் மீது எந்த குற்றச்சாட்டு மற்றும் புகார் தெரிவிக்கவில்லை. பஞ்.,ல், ஒப்பந்த பணி பூமி பூஜையின் போது, நான் அவர்களை அழைக்கவில்லை என, என் மீது, தி.மு.க.,வினர் குற்றம் சாட்டுகின்றனர். ஒப்பந்ததாரர்கள் போடும் பூமி பூஜைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீதான காழ்ப்புணர்ச்சியால் அவதுாறு பரப்ப, போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்,'' என்றார்.ஏற்கனவே, தி.மு.க.,வினர் மாவட்ட மற்றும் கிராம அளவில் பணி ஒப்பந்தங்களை பெற, அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக புகார்கள் எழும் நிலையில், தி.மு.க., நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யாததால், பஞ்., செயலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என, தி.மு.க., நிர்வாகி போஸ்டர் ஒட்டியது, அதிகாரிகளுக்கு, ஆளும் கட்சியினர் நெருக்கடி கொடுப்பது, வெட்ட வெளிச்சமாகியுள்ளது.