சிறுமி மரணம் பெற்றோர் மறியல்
சோளிங்கர்:ஆர்.கே.பேட்டை, இஸ்லாம் நகரைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகள் பவித்ரா, 14; ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் உடல்நல குறைவு காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின், பவித்ராவின் சடலத்தை வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பவித்ராவின் உறவினர்கள், மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் சோளிங்கர் மற்றும் ஆர்.கே.பேட்டை போலீசார் சமரசம் பேசினர். சோளிங்கர் அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக, ஆர்.கே.பேட்டை -- சோளிங்கர் மார்க்கத்தில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.