மேலும் செய்திகள்
மூதாட்டி அடித்து கொலை போலீசில் பெண் சரண்
14-Feb-2025
பூஜை நடத்தி பணம் பறிப்பு; போலி வைத்தியர் கைதுமேட்டூர்:மேச்சேரி, வெள்ளாறு அடுத்த ஆட்டுக்காரனுாரை சேர்ந்தவர் வளர்மதி, 45. செங்கல் தயாரிக்கும் கூலித்தொழிலாளி. அவரது வீட்டுக்கு, இரு நாட்களுக்கு முன் தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த கல்பனா, 26, தலைமுடி வாங்க வந்தார். அப்போது உடல்நிலை குறித்து விசாரித்தார். அதற்கு வளர்மதி, 'செங்கல் தயாரிக்கும் வேலை செய்வதால் கை, கால், உடல் வலி உள்ளது' என கூறினார். அதற்கு கல்பனா, 'மருந்து தரும் வைத்தியர் உள்ளார். அவரை அனுப்பி வைக்கிறேன்' என கூறிச்சென்றார்.நேற்று காலை, சூளையில் வேலை செய்து கொண்டிருந்த வளர்மதியை, காவேரிப்பட்டணத்தை சேர்ந்த வைத்தியர் சின்னசாமி சந்தித்தார். வளர்மதி, அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அப்போது, மூத்த மகனுக்கு திருமணம் தள்ளிப்போவதாக வளர்மதி கூறினார். அதற்கு அவர், 'உங்கள் காதில் உள்ள கம்மலை கழற்றி வையுங்கள். வெற்றிலையில் வைத்து பூஜை செய்தால் மகனுக்கு திருமணமாகிவிடும். மேலும், 4,500 ரூபாய் கொடுத்தால் மருந்து தருகிறேன். அதை பூசினால் உடல் வலி குறைந்துவிடும்' என்றார்.வளர்மதி, 1,500 ரூபாயை கொடுத்தார். சின்னசாமி பூஜை செய்ய முயன்றார். அப்போது வளர்மதியின் இளைய மகன் விக்னேஷ் வந்து, சின்னசாமி வைத்திருந்த கம்மலை வாங்கினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, சின்னசாமி அங்கிருந்து புறப்பட முயன்றார். விக்னேஷ், உறவினர்கள் மூலம், சின்னசாமியை பிடித்து, மேச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து, சின்னசாமியை கைது செய்தனர். விசாரணையில் போலி வைத்தியர் என்பதும், தலைமுடி வாங்கும் கல்பனா, அவரது மனைவி என்பதும் தெரிந்தது. இதனால் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
14-Feb-2025