வராத குடிநீருக்கு வரி செலுத்த வேண்டுமா; பி.டி.ஓ.,விடம் மக்கள் வாக்குவாதம்
வராத குடிநீருக்கு வரி செலுத்த வேண்டுமா; பி.டி.ஓ.,விடம் மக்கள் வாக்குவாதம்கெங்கவல்லி:ஜல்ஜீவன் குடிநீர் வரி வசூலுக்கு சென்ற, பி.டி.ஓ.,விடம், 'வராத குடிநீருக்கு வரி செலுத்த வேண்டுமா' என, பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, நடுவலுார் ஊராட்சி, ந.மோட்டூர் கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, இரு ஆண்டுகளுக்கு முன், ஜல்ஜீவன் திட்டத்தில், வீடு தோறும் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. குடிநீர் இணைப்புக்கு மாதம், 30 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 360 ரூபாய் செலுத்த வேண்டும். 2024ம் ஆண்டிற்கான குடிநீர் வரி தொகையை, அப்பகுதி மக்கள் வழங்கவில்லை.நேற்று, கெங்கவல்லி பி.டி.ஓ., சந்திரசேகரன் தலைமையிலான ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ந.மோட்டூர் கிராமத்தில், குடிநீர் வரி வசூல் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதி மக்கள் சிலர், ஜல்ஜீவன் திட்டத்தில் போடப்பட்ட குடிநீர் இணைப்பில், குடிநீர் வரவில்லை. வேறு குழாயில் குடிநீரை பிடிக்கிறோம். இந்த குடிநீரும் சீரான முறையில் வினியோகம் செய்வதில்லை. வராத குடிநீருக்கு எப்படி வரி செலுத்துவது என, பி.டி.ஓ., சந்திரசேகரனிடம் வாக்குவாதம் செய்தனர்.அவர்களிடம் பி.டி.ஓ., கூறுகையில், 'ஜல்ஜீவன் திட்டத்தில், ஆண்டுதோறும் குடிநீர் வரியை அரசுக்கு செலுத்த வேண்டும். ஜல்ஜீவன் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், வேறு குழாய் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது' என்றார். ஆனால் பொதுமக்கள், ஏற்று கொள்ளாததால், பி.டி.ஓ., உள்ளிட்ட அலுவலர்கள் அங்கிருந்து சென்றனர்.இதுகுறித்து, பி.டி.ஓ., சந்திரசேகரன் கூறுகையில், ''தலைவர் நிர்வாகத்தின்போது, குடிநீர், வீட்டு வரி போன்றவை வசூல் செய்யாமல் இருந்தது. தற்போது, தனி அலுவலர் நியமித்துள்ளதால், வரித்தொகை வசூல் செய்யும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பகுதியில், ஜல்ஜீவன் திட்ட குடிநீர் இணைப்பில் அடைப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான். அவை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. குடிநீர் பிரச்னை ஏற்படக்கூடாது என, வேறு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல், வரி கேட்டு செல்லும் அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.