வன்னியர் இட ஒதுக்கீடு முதல்வருக்கு பிடிக்கவில்லை
'வன்னியர் இட ஒதுக்கீடு முதல்வருக்கு பிடிக்கவில்லை'சேலம், டிச. 25-வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, 1,000 நாட்களாகியும் அதை அமல்படுத்தாத, தி.மு.க., அரசை கண்டித்து, பா.ம.க., சார்பில் சேலம், கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் தலைமை வகித்து பேசியதாவது:முதல்வர் ஸ்டாலிலுக்கு பிடிக்காததால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சட்டசபையை ஆண்டுக்கு, 100 நாட்கள் நடத்துவோம் என வாக்குறுதி கொடுத்தார்கள். 4 ஆண்டில், 108 நாட்கள் மட்டும் சட்டசபை நடந்துள்ளது. இதில் கூட திறமை இல்லாதவர்கள் எதற்கு ஆட்சியை நடத்த வேண்டும். ராஜினாமா செய்துவிடலாம். வன்னியர்களை வஞ்சிக்கும் இந்த அரசுக்கு வரும், 2026 தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநகர் தலைவர் கதிர்ராசரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் விசுமாறன், வக்கீல் பிரிவு நிர்வாகி குமார், நிர்வாகிகள் ஆறுமுகம், சரவணன், பகுதி தலைவர்கள், செயலர்கள் பங்கேற்றனர். ஆத்துாரில், சேலம் கிழக்கு மாவட்ட பா.ம.க., - வன்னியர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் ஜெயபிரகாஷ் தலைமையில், தி.மு.க., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட தலைவர் பச்சமுத்து, மாவட்ட முன்னாள் செயலர் நடராஜன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.மேட்டூரில், பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், மேட்டூர், கொளத்துார், மேச்சேரி, ஓமலுார் பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தால், மேட்டூரில் இருந்து சேலம், கொளத்துார் செல்லும் பஸ்கள், தற்காலிக வழி மாற்றம் செய்யப்பட்டன.சேலம் வடக்கு மாவட்ட பா.ம.க., சார்பில், அயோத்தியாப்பட்டணத்தில், மாநில வன்னியர் சங்க செயலர் கார்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் நாராயணன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், அமைப்பு செயலர் செல்வம், ஒன்றிய செயலர்கள் மாது, பச்சமுத்து, மாணவரணி மாநில செயலர் விஜயராசா உள்பட பலர் பங்கேற்றனர். 500 பேர் மீது வழக்குஇடைப்பாடியில், வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ம.க., சேலம் தெற்கு மாவட்ட செயலர் செல்வகுமார் தலைமை வகித்தார். அதில், வன்னியர் சங்க மாநில செயலர் கார்த்தி பேசினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, நகர செயலர் சண்முகம், துணை செயலர் வைத்தி உள்பட பலர் பங்கேற்றனர்.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இரு, நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வர போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். அதை மீறி, 4 சக்கர வாகனங்கள், 20 உள்பட, 90 வாகனங்களில் ஊர்வலமாக வந்ததாக, பா.ம.க.,வின், சேலம் தெற்கு மாவட்ட செயலர் செல்வகுமார், இடைப்பாடி நகர செயலர் சண்முகம் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் மீது, 6 பிரிவுகளில், இடைப்பாடி போலீசார் நேற்று வழக்குப்பதிந்தனர்.