மா மரங்களில் தத்துப்பூச்சியை தடுக்க ஆலோசனை
'மா' மரங்களில் தத்துப்பூச்சியை தடுக்க ஆலோசனைசேலம்:மா மரங்களில் தத்துப்பூச்சியை தடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் மஞ்சுளா கூறியதாவது:சேலம் மாவட்டத்தில், 15,000 ஏக்கரில் பெங்களூரா, நீலம், அல்போன்சா, இமாம் பசந்த், செந்துாரா, மல்கோவா உள்பட, பல்வேறு ரக மா சாகுபடிகள் செய்யப்படுகின்றன. தற்போது மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை மரங்களில், 60 சதவீதத்துக்கு மேல் பூக்கள் உற்பத்தியாகியுள்ளன. இம்மாத இறுதி வரை, பூக்கள் உற்பத்தி இருக்கும். மா மரங்களில் தத்துப்பூச்சிகளின் நடமாட்டம் பரவலாக தென்படுகிறது. அவை பூக்களில் அமர்ந்து, சாற்றை உறிஞ்சி குடிப்பதால் பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்துவிடும். மா பிஞ்சுகள் உற்பத்தி பாதிக்கும். பூக்களை நோய் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு லிட்டர் நீரில் தயோமித்தாக்சோம், 0.5 கிராம் அல்லது இமிடா குளோபிரிட், 0.5 மில்லி ஆகியவற்றுடன் நனையும் கந்தகம், 2 கிராம் கலந்து, பூக்கள் மீது தெளிக்க வேண்டும். பிஞ்சுகள் உதிர்வை தடுக்க, பட்டாணி அளவில் பிஞ்சு இருக்கும்போது, 10 லிட்டர் நீருக்கு, என்.ஏ.ஏ., 2.5 மில்லி கலந்து, மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். விபரம் பெற, மாவட்டத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம்.