உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்தூரில் விதிமுறை மீறி அமைக்கப்பட்ட பூங்கா

ஆத்தூரில் விதிமுறை மீறி அமைக்கப்பட்ட பூங்கா

ஆத்தூர் : ஆத்தூர் நகராட்சி, புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அண்ணாதுரை சிலை வைப்பதற்கு நகராட்சியில் அனுமதி பெற்ற தி.மு.க.,வினர், 800 சதுர அடி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பூங்கா அமைத்துள்ளதாக, தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. ஆத்தூர் நகராட்சியில், புது பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் சிலை வைப்பதற்கு, தி.மு.க., நகராட்சி கவுன்சிலர்கள் ஒப்புதல் பெற்றனர். ஆத்தூர் நகராட்சி நிர்வாகம், அண்ணாதுரை சிலை மற்றும் பீடம் அமைத்து கொள்வதற்கு அனுமதி வழங்கியது.

அதையடுத்து, தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி சேர்மன் பூங்கொடி, கவுன்சிலர்கள் மற்றும் நகர செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர், ஆத்தூர் புது பஸ் ஸ்டாண்டின் பஸ் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதி முன், அண்ணாதுரை சிலை அமைக்க இடம் தேர்வு செய்தனர். ஜனவரி மாதம், மொத்தம், 5 லட்சம் ரூபாய் செலவில் வெண்கல சிலை, பூங்கா அமைத்து, கட்சி சின்னத்துடன் வடிவமைப்பு பணிகளை, நகராட்சி பணியாளர்களுடன் பணிகளை மேற்கொண்டனர். சிலை மற்றும் பீடம் மட்டும் அமைக்க அனுமதி பெறப்பட்ட நிலையில், அப்போது ஆளும் கட்சியாக இருந்ததால், நகராட்சிக்கு சொந்தமான, 800 சதுர அடி பரப்பளவு நிலத்தை, தி.மு.க.,வினர் ஆக்கிரமிப்பு செய்தனர். ஆக்கிரமிப்பு பகுதியில், தி.மு.க., கொடி கம்பத்துடன் பூங்கா அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஃபிப்.,1ம் தேதி, முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், அண்ணாதுரை சிலை மற்றும் பூங்காவை திறந்து வைத்தார். பின், சிலை அமைந்துள்ள பூங்காவுக்கு, மேட்டூர்- ஆத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சப்ளை செய்யும் பைப் லைன் மூலம் தண்ணீர் நிரப்பி வந்தனர். சில நாட்களுக்கு முன், 9வது வார்டு பகுதியில் இருந்து வரும் குடிநீர் பைப் லைன், 'கட்' செய்யப்பட்டதால், பூங்காவுக்கு தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டது. அதனால், தற்போது தண்ணீரின்றி பூங்கா அலங்கோலமாக காட்சியளிக்கிறது. நகராட்சி இடத்தை தி.மு.க.,வினர் விதி மீறி ஆக்கிரமிப்பு செய்து, கொடி கம்பம், பூங்கா அமைத்துள்ளதால், அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

'நகராட்சிக்கு சொந்தமான புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தி.மு.க.,வினர் ஆக்கிரமிப்பு செய்து கட்சி கொடி கம்பம், கட்சியின் சின்னத்துடன் பூங்கா ஆகியவை விதிமுறை மீறி அமைத்துள்ளதை அகற்ற வேண்டும். அதற்கு அனுமதி வழங்கிய நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், சேர்மன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !