எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில்பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடக்கம்
எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில்பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடக்கம்சேலம்:சேலம், குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நேற்று இரவு, 8:00 மணிக்கு பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதற்காக பக்தர்கள் கூடை கூடையாக பல வண்ண மலர்களையும், மஞ்சள், குங்குமம், சந்தனத்தால் கம்பத்தை அலங்கரித்து எடுத்துக்கொண்டு, அங்குள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.தொடர்ந்து கோவிலுக்கு வந்து, மூலவர் எல்லைப்பிடாரி அம்மனுக்கு மலர்களால் அபிேஷகம் செய்து, பூச்சாட்டு வைபவம் நடந்தது. அம்மன் முன் கம்பம் நடப்பட்டது. இதை ஒட்டி தினமும் அம்மனுக்கு விதவித அலங்காரம் செய்து பூஜை நடக்கும். வரும், 25ல் சக்தி அழைப்பு, மாவிளக்கு ஊர்வலம், 26ல் பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், 27ல் திருக்கல்யாணம், குண்டம் இறங்கும் வைபவம், 28ல் பால்குட ஊர்வலம், தங்க கவசம் சாத்துபடி, 29ல் அன்னதானம், 30ல் மஞ்சள் நீராட்டு விழா, 31ல் திருவிளக்கு பூஜையுடன் நிறைவு பெறும். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கட்டளை உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்ரூ.9,000 வழங்க ஆர்ப்பாட்டம்சேலம்:சேலம், தளவாய்பட்டியில் உள்ள, பி.எப்., மண்டல கமிஷனர் அலுவலகம் முன், 1995 இ.பி.எப்., பென்ஷன்தாரர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மண்டல தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார்.அதில், குறைந்தபட்ச மாத ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்குதல்; இ.எஸ்.ஐ., திட்டத்தில் மருத்துவ சேவை வழங்குதல்; 2014க்கு பின், முன் என்ற எந்த பாகுபாடுமின்றி, தகுதியுள்ள அனைவருக்கும் முழு சம்பளத்துக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தல்; மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஆவின், இரும்பாலை, டால்மியா மேக்னசைட், கூட்டுறவு நுாற்பாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து ஓய்வு பெற்ற, சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.