திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்
சேலம், சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக திருவிழா கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமம் காலை, மாலையில், சுவாமி வீதி உலா நடக்கிறது. நேற்று காலை, அம்பாளுடன் சுகவனேஸ்வரர், பல்லக்கில் வீதி உலா வந்தார். மாலை, ஸ்வர்ணாம்பிகை அம்மனுடன், சுகவனேஸ்வரரை, வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து திருக்கல்யாண உற்சவத்தை, சிவாச்சாரியார்கள் தொடங்கினர்.சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை கரங்களில் காப்பு கட்டப்பட்டு, திருமாங்கல்யத்துக்கு யாக வேள்வியுடன் சிறப்பு பூஜை செய்து, பக்தர்களின், 'சிவ சிவ' கோஷம், வேத மந்திரம் முழங்க, ஸ்வர்ணாம்பிகை கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து கல்யாணம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள், மணக்கோலத்தில் காட்சியளித்த சுவாமியை தரிசித்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் ஸ்வர்ணாம்பிகை சமேத சுகவனேஸ்வரர் வீதி உலா வந்தார். வரும், 9 காலை, ஸ்வர்ணாம்பிகை அம்மன் சமேத சுகவனேஸ்வரருக்கு, சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் செய்து தேரில் எழுந்தருள செய்வர். காலை, 8:30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கும். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா உள்ளிட்ட உறுப்பினர்கள், கோவில் உதவி கமிஷனர் அம்சா, சிவாச்சாரியார்கள், உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.அதேபோல் கோட்டை அழகிரிநாதர் கோவில் வைகாசி பிரமோற்சவ விழாவையொட்டி, இன்று சுந்தரவல்லி தாயார் - அழகிரிநாதர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 10ல் தேரோட்டம் நடக்க உள்ளது.