மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா கோலாகலம்
சேலம், சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. அம்மனுக்கு வேண்டுதல் வைத்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் ஏராளமானோர், நேற்று அம்மனுக்கு பொங்கல் படையல் வைத்து வழிபட்டனர். வாழை உள்ளிட்ட பழ வகைகள் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து வேண்டுதல் நிறைவேற்றிய அம்மனுக்கு அக்னி கரகம் ஏந்தி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.மாலையில் அம்மனுக்கு பல்வேறு வித திரவியங்களால் அபிஷேகம் செய்து, தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர். பலர், ஆடு, கோழிகளை பலியிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுதும் உள்ளூர் அரசு விடுமுறை என்பதால், கோவிலில் கூட்டம் அலைமோதியது.தீ மிதித்து நேர்த்திக்கடன்சேலம் குகை காளியம்மன், மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆடு, கோழி பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து தீ மிதி விழா நடந்தது. பூசாரி, அம்மனை தலையில் சுமந்த படி, குண்டத்தில் இறங்கியதை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.அதேபோல் தாரமங்கலம், கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. அதிகாலை, 4:20க்கு பூசாரி தீ மிதித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அம்மன் வேடம், பார்வை குறைபாடு பக்தர்கள், குழந்தைகள், பெண்கள், போலீசார் என ஏராளமான பக்தர்கள், 0.5 கி.மீ.,க்கு வரிசையில், 6 மணி நேரம் காத்திருந்து, தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். சில பக்தர்கள் தீச்சட்டி எடுத்து, அலகு குத்தி, உடம்பில் வேப்பிலை கட்டி தீ மிதித்தனர். பலர் அம்மனுக்கு பொங்கல் வைத்து கோழி, ஆடுகளை பலியிட்டு வழிபட்டனர். பலர் அங்கப்பிரதட்சணம் செய்து தரிசனம் செய்தனர். அதேபோல் சக்திமாரியம்மன் கோவிலில், திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்.பால்குட ஊர்வலம்சேலம், களரம்பட்டி புத்து மாரியம்மன் கோவிலில், 37வது திருவிழாவை ஒட்டி, அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, 208 பெண்கள், பால் குடத்தை சுமந்து, முக்கிய வீதிகள் வழியே ஊர்வலம் வந்து கோவிலை அடைந்தனர். பின் புத்துமாரியம்மனுக்கு, பால் அபிேஷகம் நடந்தது. பின் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.அதேபோல் அம்மா பேட்டை செங்குந்தர் மாரியம்மன், சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன், கடை வீதி சின்ன மாரியம்மன், நஞ்சம்பட்டி, பொன்னம்மா பேட்டை, அஸ்தம்பட்டி ஆகிய மாரியம்மன் கோவில்களில் ஆடி திருவிழா களைகட்டியது.பூக்கள் விலை உயர்வுஆடி திருவிழா, வரும், 8ல் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, வ.உ.சி., மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கிலோ, 600க்கு விற்ற குண்டுமல்லி நேற்று, 700 ரூபாய், 360க்கு விற்ற முல்லைப்பூ, 500; 120க்கு விற்ற அரளி பூ, 240; 160க்கு விற்ற சம்பங்கி, 240 ரூபாயாக அதிகரித்தது. ஜாதிமல்லி, 320, காக்கட்டான், 320 ரூபாய்க்கு விற்றது.