மின் குறைதீர் முகாமில் 230 மனுக்கள் வழங்கல்
மின் குறைதீர் முகாமில் 230 மனுக்கள் வழங்கல்சேலம்:சேலம் மின்பகிர்மான வட்டத்தில், சேலம் நகரம், அன்னதானப்பட்டி, ஆத்துார், வாழப்பாடி உள்பட, 6 கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம் நேற்று நடந்தது. அதில் மின்கட்டண குறைபாடு, பழுதான மின்மீட்டர், குறைந்த மின்னழுத்தம், பழுதான மின்கம்பம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை, நுகர்வோர் தெரிவித்தனர். 6 கோட்டத்திலும், 230க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. 30க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. இதனிடையே அன்னதானப்பட்டியில் நடந்த முகாமை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பார்வையிட்டு, மக்கள் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.