| ADDED : ஆக 12, 2024 06:29 AM
இடைப்பாடி: மேட்டூர் அணை நிரம்பி வெளியேறும் உபரிநீரை, சேலம் மாவட்டத்தில் உள்ள, 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக்கோரி, கொங்கணாபுரம் அருகே வெள்ளாளபுரம் ஏரியில் காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு தலைவர் வேலன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஒருங்கிணைப்பாளர் தம்பயா பேசியதாவது: காவிரி உபரிநீர் திட்டத்தில் உள்ள ஏரிகளை இணைக்கும் கால்வாய் பணி முழுமை அடையவில்லை. இதனால் நிறைய ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.வெள்ளாளபுரம் ஏரியில் உள்ள துணை உபரிநீரேற்று திட்டப்பணி முடியாததால் கன்னந்தேரி ஏரிக்கு உபரிநீர் கொண்டு செல்லவில்லை.அதேபோல் தண்ணீர் செல்லும் கால்வாய் பணிகள் பல இடங்களில் முடியாததால் உபரிநீர் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு, போர்க்கால அடிப்படையில் உபரிநீர் கால்வாய் பணிகளை முடித்து இந்த ஆண்டே, 100 ஏரிகளுக்கும் காவிரி வெள்ள உபரிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.