மகளிர் உரிமைத்தொகைக்கு 11,188 பேர் விண்ணப்பம்
சேலம், சேலம், அம்மாபேட்டையில், 38, 39வது வார்டுக்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், முகாமை பார்வையிட்ட பின் கூறியதாவது:மாவட்டத்தில் கடந்த, 15 முதல், 18 வரை நடந்த முகாமில், பல்வேறு துறைகள் சார்பில், 9,840 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதுதவிர, கருணாநிதி மகளிர் உரிமைத்தொகை கேட்டு, 11,188 பேர் விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து இன்று(நேற்று) நடந்த முகாமில், 7 பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பு, 3 பேருக்கு சொத்து வரி பெயர் மாற்றம், 4 பேருக்கு பிறப்புச்சான்று, ஒருவருக்கு ரேஷன் அட்டை, மாற்றுத்திறனாளிக்கு, 12,000 ரூபாய் மதிப்பில் ஊன்றுகோல், இன்னொரு மாற்றுத்திறனாளிக்கு, 16,500 ரூபாய் மதிப்பில் சக்கர நாற்காலி என, 17 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் மக்கள் சிரமமின்றி, முகாமில் கோரிக்கை மனு அளிக்க, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.