திருடிய 2 பேர் சுற்றிவளைப்பு 17 பவுன் நகைகள் மீட்பு
திருடிய 2 பேர் சுற்றிவளைப்பு17 பவுன் நகைகள் மீட்புஇடைப்பாடி, அக். 20-இடைப்பாடி அருகே வெண்டனுாரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 30. ஈரோடு அக்ரஹாரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைஸராக உள்ளார். இவரது மனைவி பாக்கியம், குழந்தை கவுசிக். கடந்த, 16 மாலை, பாக்கியம் வீட்டை பூட்டி விட்டு வெண்டனுாரில் உள்ள அங்கன்வாடியில் குழந்தையை அழைத்து வரச்சென்றார். திரும்பி வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் திறக்கப்பட்டு அதில் இருந்த, 17.8 பவுன் நகைகள் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து பாக்கியம் புகார்படி கொங்கணாபுரம் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தபோது, திருடிச்சென்றவர்கள் பைக் பதிவு எண்ணை கண்டுபிடித்து விசாரித்தனர். அதில் திருடியது தாரமங்கத்தை சேர்ந்த ரமேஷ், 31, கோகுல்ராஜ், 27, என தெரிந்து, நேற்று தாரமங்கலத்தில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் மது அருந்துவதற்கு, பூட்டியுள்ள வீடுகளை குறிவைத்து திருடி வந்தது தெரிந்தது. மேலும் பாக்கியம் வீட்டில் நகை திருடியதோடு, வழியில் போடிநாயக்கன்பட்டி, பட்டறை கட்டிவளவில் பூட்டியிருந்த மற்றொரு வீட்டில், 15,000 ரூபாய் திருடியதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 17.8 பவுன் நகைகள், 15,000 ரூபாயை மீட்டனர்.