தம்மம்பட்டி ஜல்லிக்கட்டில் 23 பேர் காயம் 100 காளைகளை விடாததால் வாக்குவாதம்
ஆத்துார் சேலம் மாவட்டம் ஆத்துார் அடுத்த தம்மம்பட்டி, தண்ணீர் பந்தல் பகுதியில் ஜல்லிக்கட்டு விழா நேற்று நடந்தது. காலை, 8:40 மணிக்கு, கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார். 600க்கும் மேற்பட்ட காளைகளை அழைத்து வந்து உரிமையாளர்களும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். மருத்துவ பரிசோதனைக்கு பின், 350 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். மதியம், 2:40 மணி வரை, 485 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, சில வீரர்கள் அடக்கினர். பல வீரர்கள், தடுப்புகளில் ஏறி தஞ்சமடைந்தனர். ஒரு காளைக்கு, 2 லட்சம் ரூபாய், மற்றொரு காளைக்கு, 5,000 ரூபாய், மற்ற, 250 காளைகளுக்கு பட்டுப்புடவை, டேபிள், குக்கர் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பின் காளை மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படாமல், காளைகள் மட்டும் அவிழ்த்துவிடப்பட்டன.பரிசு இல்லைஅதில், 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விட அனுமதிக்காததால், அதன் உரிமையாளர்கள், விழா குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவிர போதிய பரிசு பொருட்கள் இல்லாமல் விழா நடத்தியது குறித்து, வீரர்களும் வாக்குவாதம் செய்தனர். அவர்களை, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.இதனிடையே ஜல்லிக்கட்டில், 7 வீரர்கள், 8 உரிமையாளர்கள், 5 பார்வையாளர்கள் உள்பட, 23 பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த, 3 பேர், ஆத்துார், சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். ஜல்லிக்கட்டு விழாவில், சேலம் கூடுதல் எஸ்.பி., சோமசுந்தரம் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.