பக்தர்களிடம் நடந்த வழிப்பறி வழக்கில் 3 பேருக்கு தண்டனை
ஆத்துார், வடசென்னிமலை, முருகன் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் வழிப்பறி செய்த வழக்கில், மூன்று பேருக்கு ஆத்துார் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே வடசென்னிமலையில் பாலசுப்ரமணியர் கோவில் உள்ளது. மலை மீதுள்ள கோவிலுக்கு சாலை மற்றும் படிகள் வழியாக தனியாக செல்லும் பெண்கள், தனிமையில் இருக்கும் ஜோடிகளை குறி வைத்து, பணம், நகை, மொபைல் போன் உள்ளிட்டவைகளை அபகரித்து, சிலர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர்.கடந்த 2023, பிப்., 10ல், கோவிலுக்கு சென்ற மூன்று பக்தர்களிடம் பணம், நகை அபகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மூன்று பேர் அளித்த புகார்படி, ஆத்துார் ஊரக போலீசார் விசாரித்து ஆத்துார் மாரிமுத்து, 25, ஈரோடு தேவா, 28, சிவா, 27, ராமச்சந்திரமூர்த்தி, 28, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இதில், ராமச்சந்திரமூர்த்தி இறந்துவிட்டார்.இந்த வழக்கு ஆத்துார் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி கணேசன் வழக்கை விசாரித்து, வழிப்பறி கும்பலை சேர்ந்த ஆத்துார் மாரிமுத்துவுக்கு, 10 ஆண்டு சிறை மற்றும் 2,000 ரூபாய் அபராதம்; ஈரோடு தேவா, சிவா ஆகியோருக்கு தலா, 7 ஆண்டு சிறை மற்றும் தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மூவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.