ரூ.4.50 கோடி மோசடி வழக்கில் 6 பேர் கைது
சேலம்:ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி, 4.50 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஆறு பேரை கைது செய்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார், மேலும் பலரை தேடுகின்றனர்.துாத்துக்குடியை சேர்ந்த ஒருவர், 2024ல், ரிசர்வ் வங்கியில் புகார் மனு அளித்தார். அதில், 'ரிசர்வ் வங்கி சார்பில் இரிடியம், காப்பர் விற்கப்படுகிறது. அதை வாங்கி விற்றால், கூடுதல் பணம் கிடைக்கும். அதற்கான சேவை கட்டணம், அதிகாரிகளுக்கு கமிஷன் தர வேண்டும் என கூறி, மர்ம நபர்கள், சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வசூல் வேட்டை நடத்துகின்றனர்' என கூறி இருந்தார்.இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் கென்னடி அளித்த புகாரின்படி, சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர்.அதில் தஞ்சாவூரை சேர்ந்த நித்யானந்தம், 60, சந்திரா, 58, ஆகியோரை கடந்த 28ல் கைது செய்தனர். தொடர்ந்து தர்மபுரியை சேர்ந்த அன்புமணி, 45, சேலம் முத்துசாமி, 35, கேசவன், 44, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சார்லா கிஷோர் குமார், 48, ஆகியோரை, 30ல் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து, தங்க நிற உலோகம், போலி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில், 20க்கும் மேற்பட்டோரிடம் இருந்து, 4.50 கோடி ரூபாயை இந்த கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது.இதில் தொடர்புடைய, மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.