விவசாய நிலத்துக்கு வழி விடாத கும்பல் ஒரு குடும்பமே தீக்குளிக்க முயற்சி
சேலம் விவசாய நிலத்துக்கு செல்ல வழி விடாமல் ஒரு கும்பல் தடுப்பதால், ஆடையூரை சேர்ந்த குடும்பத்தினர், 4 பேர் தீக்குளிக்க முயன்றனர்.சேலம் மாவட்டம் இடைப்பாடி, ஆடையூரை சேர்ந்தவர் குமார், 48. இவரது மனைவி சாந்தி, 43, தாய் சீரங்காயி, 65, தந்தை மாணிக்கம், 70. இவர்கள் நேற்று, சேலம் கலெக்டர் அலுவலக போர்டிகோ பகுதியில், டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர்.அப்போது குமார் கூறியதாவது:எங்களுக்கு சொந்தமாக, 1 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் அருகே, புறம்போக்கு நிலம் வழியே தான் சென்று வந்தோம். ஆனால் அப்பகுதியை சேர்ந்த, 4 பேர், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, அந்த வழியே செல்ல விடாமல் தடுத்தனர். மேலும் எங்கள் வீட்டுக்கு வந்து, தாயை தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அந்த வழியே செல்லக்கூடாது என, கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.எங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாததால், தற்கொலை செய்து கொள்ள நினைத்து, இங்கு வந்தோம். மாவட்ட நிர்வாகம் விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, விவசாயம் செய்ய வழி ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தொடர்ந்து போலீசார், 4 பேரையும், டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரிக்கின்றனர்.