வாக்காளர் பட்டியல் முகாம் தி.மு.க.,வினருக்கு அறிவுரை
சேலம்: தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்ட செயலரான, அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை:தேர்தல் கமிஷன் அறிவிப்பின்படி, 2025 ஜன., 1 தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்து வரைவு வாக்காளர் பட்டியல் வரும், 29ல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, வரும், 29 முதல், நவ., 28 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு நவ., 9, 10, 23, 24ல் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாத புது வாக்காளர் பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்துள்ள வாக்காளர்களையும், பட்டியலில் சேர்க்க வேண்டும். தொகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இருமுறை பதிவான பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.இப்பணியில் மாவட்ட, மாநகர் நிர்வாகிகள், பகுதி, வட்ட, ஒன்றிய, பேரூர், வார்டு, ஊராட்சி கிளை செயலர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும். ஓட்டுச்சாவடி நிலைய முகவர்கள், ஓட்டுச்சாவடி அளவில் குழு உறுப்பினர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபடுத்தி, வாக்காளர் சரிபார்த்தல் பணியை நிறைவேற்ற வேண்டும்.