கரும்பில் மெழுகு வண்டு தாக்குதல் வேளாண் அதிகாரிகள் கள ஆய்வு
ஓமலுார், காடையாம்பட்டி தாலுகாவில் டேனிஷ்பேட்டை, கே.மோரூர், காடையாம்பட்டி, கணவாய்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கரும்பின் துார் பகுதியில் வெள்ளை நிற, 'சி' வடிவ புழுக்கள் தென்படுகின்றன. இதனால் கரும்பை சற்று லேசாக இழுத்தால், கையோடு வந்துவிடுகிறது. இதுதொடர்பாக அப்பகுதிகளில் உள்ள கரும்பு தோட்டங்களை, சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ரவி ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: மெழுகு வண்டு பாதிப்பு உள்ளது. உயிரியல் முறையில் கரும்பு வயலுக்கு சரியான தருணத்தில் நீர் பாசனம் செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு மெட்டாரைசியம் அனிசோப்லியே, பெவேரியா பேசியானா தலா, 4 கிலோவை, நன்கு மட்கிய, 100 கிலோ தொழு உரத்துடன் கலந்து, பாதிக்கப்பட்ட தோட்ட மண்ணில், 8 முறை நீர் பாசனம் செய்ய வேண்டும். ரசாயன முறையில் பிப்ரோனில், 0.3 ஏக்கருக்கு, 8 முதல், 10 கிலோ போதிய அளவு மணலுடன் கலந்து, மருந்தை மண்ணில் இட்டு முறையாக நீர் பாசனம் செய்ய வேண்டும். மெழுகு வண்டு புழுக்களின் தாக்குதலை, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை கையாளுவதன் மூலம் குறைக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.காடையாம்பட்டி வேளாண் உதவி இயக்குனர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.