அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., திறந்த ரேஷன் கடை மீண்டும் தி.மு.க.,வினர் திறப்பால் வைரல்
கெங்கவல்லி, டிச. 4-அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., திறந்து வைத்த ரேஷன் கடையை, மீண்டும், தி.மு.க.,வினர், 'ரிப்பன்' கட்டி திறந்த வீடியோ பரவி வருகிறது.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே, தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து, காந்தி நகர் மற்றும் கோனேரிப்பட்டி ஆகிய இடங்களில், இரு ரேஷன் கடைகள் கட்ட, கெங்கவல்லி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா, 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணி நடந்து முடிந்தது. அந்த கட்டடங்களை, கடந்த நவ., 29ல், அ.தி.மு.க.,வை சேர்ந்த, கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி திறந்து வைத்தார். அக்கட்சியின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்நிலையில் காந்தி நகர் ரேஷன் கடையை நேற்று, மீண்டும் திறப்பதற்கான நிகழ்ச்சியை, தம்மம்பட்டி பேரூர் தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து, அந்த கடையில் 'ரிப்பன்' கட்டிவிட்டு, தி.மு.க., பேரூர் பொறுப்பாளர் சண்முகம் தலைமையில் கட்சியினர் திறந்து வைத்தனர். ரேஷன் கடை முன், 'புதிய ரேஷன் கடை அமைத்த முதல்வருக்கு நன்றி' என்ற பேனர் வைத்து, 'முதல்வர், துணை முதல்வர் வாழ்க' என்ற கோஷம் எழுப்பினர்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., திறந்து வைத்த ரேஷன் கடையை, தி.மு.க.,வினர் மீண்டும் திறப்பு விழா நடத்தியுள்ளதாக, வீடியோ பரவி வருகிறது.