அவதுாறு கிளப்பும் அ.தி.மு.க., ஒப்பந்ததாரர் சங்கம் குற்றச்சாட்டு
சேலம்,சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கொறடா, ஒப்பந்ததாரர் சங்க தலைவர் மீது அவதுாறு கிளப்புவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்க பொருளாளர் முரளி அளித்த பேட்டி: சங்க தலைவர் காமராஜ் குறித்து, சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர், கொறடா அவதுாறு பேசி வருகின்றனர். மாநகராட்சி டெண்டர், ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. நாட்டில் இருந்து யார் வேண்டுமானாலும் பங்கேற்க முடியும். இதில் தனிப்பட்ட தலையீடு எப்படி இருக்க முடியும். சங்கத்தில் அனைத்து கட்சியினரை சேர்ந்தவர்களும் உள்ளனர். ஆனால் ஒப்பந்ததாரர்கள் நலன் மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். சம்பந்தப்பட்ட டெண்டரில், காமராஜ் கலந்து கொள்ளவே இல்லை. அவரது பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் அவதுாறு பேசி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.