எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி:மாநில அளவில் சேலம் மாணவி முதலிடம்
சேலம்:தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவன அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் எய்ட்ஸ் பாதிப்பு அதிகமுள்ள, 15 மாவட்டங்களில், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து, ஆண்கள், பெண்களுக்கு, 5 கி.மீ., மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. அதில் முதல், 3 இடங்களை பிடித்த 45 ஆண்கள், 45 பெண்களுக்கு, மாநில மாரத்தான் போட்டி, சேலம், 4 ரோடு அருகே சிறுமலர் பள்ளி யில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., ரவிக்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். காந்தி மைதானம், வின்சென்ட், காந்தி சாலை, ராமகிருஷ்ணா சாலை, விஜயா மருத்துவமனை, 4 ரோடு வழியே மீண்டும் பள்ளியை அடைந்தது.பெண்கள் பிரிவில் சேலம் கல்லுாரி மாணவி கவுரி, ஈரோடு மாணவி வித்யா, சேலம் மாணவி வைத்தீஸ்வரி முறையே, முதல், 3 இடங்களை பிடித்தனர். ஆண்கள் பிரிவில், கோவை கல்லுாரி மாணவர் நவீன் பிரபு, தஞ்சாவூர் மாணவர் அப்துல் ஷமின், நாமக்கல் கல்லுாரி மாணவர் அபராஜிதன் முறையே, முதல், 3 இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு முறையே, 35,000, 25,000, 15,000 ரூபாய் பரிசுகள் வழங்கப்பட்டன. தவிர மேலும், 4 ஆண்கள், 3 பெண்களுக்கு ஆறுதல் பரிசாக தலா, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. மாநில அளவில் முதல் இரு இடங்களை பிடித்தவர்கள், தேசிய மாரத்தான் போட்டிக்கு தகுதி பெற்றனர். ஏற்பாடுகளை சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் தாமோதரன் உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.