நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கிய நிலங்களை மீட்கக்கோரி முறையீடு
ஈரோடு, நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்கம் மூலம், வழங்கப்பட்ட நிலங்கள் பிறர் பயன்பாட்டில் இருப்பதை மீட்கக்கோரி, டி.ஆர்.ஓ.,விடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா தலைமையில், அந்தியூர் தாலுகா மாத்துார் கிராமப்பகுதி மக்கள் மனு வழங்கி கூறியிருப்பதாவது:ஈரோடு மேற்கு மண்டலத்தில், 1956ல், பல கிராமங்களில் நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்கம் மக்களால் நிறுவி, அரசால் பதிவு செய்தனர். அச்சங்க உறுப்பினர்களான பட்டியலின மக்கள், ஏழை, எளிய மக்களுக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிலங்கள் உரிய பட்டியலின பயனாளிகளிடம் இல்லை. அவர்களை வெளியேற்றிவிட்டு, பயனாளிகள் அல்லாத தனி நபர்கள் பயன்பாட்டில் வைத்துள்ளனர்.கோபி, அந்தியூர் தாலுகாக்களில் இதுபோன்ற நிலங்கள், பஞ்சமி நிலங்கள், நில உச்சவரம்பு நிலங்கள் உரிய பயனாளிகளிடம் இருந்து பறித்து, வேறு நபர்கள் பயன்படுத்தி வருவதை மீட்டு உரியவர்களுக்கே வழங்க வேண்டும். மாத்துாரில், 250 ஏக்கர் நிலம் பல நுாறு குடும்பங்களுக்கு வழங்கப்பட்டும், நிலமற்றவர்களாக உள்ளதால், அந்நிலங்களை மீட்டு வழங்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.