தவறுதலாக பணம் அனுப்பிய விவகாரம் ரூ.30,000 இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு
சேலம், 'கூகுள்பே' மூலம் தவறுவதாக பணம் அனுப்பிய விவகாரத்தில், சேவை குறைபாடுக்கு, 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க, தனியார் வங்கிக்கு, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.சேலம், அன்னதானப்பட்டி, நியூ கந்தப்பா காலனியை சேர்ந்த, செல்வம் மகள் கீர்த்தனா. இவர் கடந்த ஆண்டு, கனரா வங்கி கணக்கில் இருந்து, 'கூகுள் பே' மூலம், 68,000 ரூபாய் அனுப்பியுள்ளார். அதில் வங்கி கணக்கு எண் தவறுதலாக பதிவிட்டதால், கோலாப்பூரில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வாடிக்கையாளருக்கு பணம் சென்றது. இதுகுறித்து வங்கி அறிவுறுத்தலின்படி, சைபர் கிரைம் போலீசில், கீர்த்தனா புகார் அளித்தார்.இதுகுறித்து கீர்த்தனாவை, மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட வங்கி நிர்வாகம், 'வழக்கை வாபஸ் பெற்றால், வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை பெற்று அனுப்பப்படும்' என உறுதி அளித்தது. அதை நம்பிய கீர்த்தனா, வழக்கை வாபஸ் பெற்றார். பின் தனியார் வங்கி பணத்தை வழங்காததோடு, முறையான பதில் அளிக்கவில்லை. மன உளைச்சலுக்கு ஆளான கீர்த்தனா, சேலம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.அதில், கீர்த்தனாவுக்கு, 68,000 ரூபாயை திரும்ப பெற்று வழங்குவதோடு, சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அவருக்கு, 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு நேற்று முன்தினம், ஆணைய தலைவர் கணேஷ்ராம் உத்தரவிட்டார்.