மேட்டூர் கால்வாயில் மூழ்கிய தறி தொழிலாளி சடலம் மீட்பு
மேட்டூர், மேட்டூர் கால்வாயில் மூழ்கிய தறி தொழிலாளி சடலத்தை நேற்று தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.இளம்பிள்ளை, வலுக்கன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, 33. திருமணமாகிய நிலையில் மனைவி பிரிந்து சென்று விட்டார். நேற்று முன்தினம் மதியம் ராஜா, அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோர், மேட்டூருக்கு சுற்றுலா வந்தனர். மதியம், 3:00 மணியளவில் அணை அடிவாரம் கிழக்கு, மேற்கு கால்வாயில் குள்ளவீரன்பட்டி பகுதியில் குளித்தனர். நீச்சல் தெரிந்த போதிலும், ராஜாவை தண்ணீர் இழுத்து சென்று விட்டது. மேட்டூர், நங்கவள்ளி தீயணைப்பு மீட்பு குழுவினர் நேற்று முன்தினம் மாலை, 3:30 முதல், 6:30 மணி வரை ராஜாவை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.நேற்று காலை, 7:00 மணிக்கு மீண்டும் மேட்டூர், நங்கவள்ளி தீயணைப்பு மீட்பு குழுவினர், 38 பேர் நீரில் ராஜாவை தேடினர். இந்நிலையில், மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார் உத்தரவுபடி, நேற்று காலை கால்வாயில் பாசன நீர் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ராஜா சடலம் பொன்னகர் பாலம் அருகே, கால்வாயில் மூழ்கியிருந்தது தெரியவந்தது.தீயணைப்பு குழுவினர் ராஜா சடலத்தை மீட்டு, பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.