| ADDED : நவ 24, 2025 04:27 AM
சேலம்:இந்திய அரசு மத்திய பனை பொருட்கள் நிறுவனம் சார்பில், சேலம், நான்கு ரோடு, சாமுண்டி காம்ப்ளக்ஸ் தரைதளத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில், வரும் டிச., 3- முதல், 12 வரை, 10 நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடக்கிறது. அதில், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை; கொள்முதல் செய்யும் முறை; உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல்; கடன் தொகை வழங்கும் முறை; ஹால்மார்க் தரம் அறியும் விதம் குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர். 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வித்தகுதி குறைந்தது, 8-ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.தேசிய கூட்டுறவு, தனியார் வங்கி, நகை அடகு கடைகளில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். மேலும், சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்தலாம். நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம்.விருப்பமுள்ளவர்கள், மூன்று ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழ் கொண்டு வர வேண்டும். பயிற்சி கட்டணம், 7,000 ரூபாய். விபரங்களுக்கு, 9443728438 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.