பா.ம.க., - அன்புமணி ஆதரவு ஒ.செ., உள்பட 2 பேர் மீது வழக்கு
வாழப்பாடி, சேலம், பெத்தநாயக்கன்பாளையம், கல்லேரிப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி, 56. பா.ம.க., ராமதாஸ் அணி, சேலம் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர். இவர், கட்சிக்காரர் ராஜ மாணிக்கத்தின், 'ஸ்கார்பியோ' காரில், நேற்று முன்தினம் வடுகத்தம்பட்டியில் இருந்து மத்துார் பிரிவு சாலை அருகே, எம்.எல்.ஏ., அருள் காரின் பின்புறம் சென்றுகொண்டிருந்தார். ராஜமாணிக்கமும் உடனிருந்தார்.அப்போது, எம்.எல்.ஏ., காரை மறித்து தாக்குதல் நடந்ததால், வெங்கடாஜலபதி, ராஜமாணிக்கம் ஆகியோர், காரை திருப்பி, சிங்கிபுரம் வழியே, வாழப்பாடி, புதுப்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அன்பு மணி ஆதரவாளர்களான, பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய செயலர் சடையப்பன், ராஜேஷ் உள்பட சிலர் தாக்கினர். வெங்கடாஜலபதி காயம் அடைந்தார். அவர்கள் வந்த கார் கண்ணாடி உடைந்தது. வெங்கடாஜலபதி, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, வாழப்பாடி போலீசார், சடையப்பன், ராஜேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.