டிரைவரை கடத்தி பொக்லைனை அபகரிக்க முயற்சி சகோதரர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு
சேலம், கார் டிரைவரை கடத்தி, பொக்லைனை அபகரிக்க முயன்றதோடு, கொலை மிரட்டல் விடுத்த, சகோதரர்கள் உள்பட, 5 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.சேலம், சின்னதிருப்பதி, அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன், 52. கார் டிரைவரான இவர், 2022ல், சின்னதிருப்பதியை சேர்ந்த ராஜ்குமார், அவரது தம்பி ராஜசேகரனிடம், பொக்லைன் இயந்திரத்தை, 21.50 லட்சம் ரூபாய்க்கு, விலைக்கு வாங்கினார். இந்நிலையில் ராஜ்குமார், கேபிள் ஒயர் பதிக்கும் வேலை செய்து வருவதால், அவரிடமே, பொக்லைனை, ஒப்பந்தம் பேசி மாதம், 90,000 ரூபாய் வாடகைக்கு செந்தில்நாதன் கொடுத்தார்.தொடர்ந்து வாடகை கட்டி வந்த ராஜ்குமார், கடந்த, 10 மாதங்களுக்கு மேலாக வாடகை கொடுக்கவில்லை. இதனால் செந்தில்நாதன், பொக்லைனை கேட்டும், ராஜ்குமார் கொடுக்கவில்லை.இந்நிலையில் ராஜ்குமார் உள்பட சிலர், செந்தில்நாதனை கடத்திச்சென்று தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, பத்திரத்தில் பொக்லைனை எழுதிக்கொடுக்கும்படி மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய செந்தில்நாதன், கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் நடவடிக்கை இல்லாததால், வேதனை அடைந்த செந்தில்நாதன், சேலம், 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கன்னங்குறிச்சி போலீசாருக்கு, நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி போலீசார் விசாரித்து, செந்தில் நாதனை கடத்தி பொக்லைனை அபகரிக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்ததாக, ராஜ்குமார், அவரது தம்பி ராஜசேகரன், நண்பர்கள் பொன்னுசாமி, முருகன், கலையரசன் மீது, நேற்று வழக்குப்பதிந்தனர்.