நகை, பணம் திருடிய வழக்கு; தனிப்படை போலீசார் விசாரணை
ஆத்துார்: அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில் நகை, பணம் திருடிய வழக்கில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆத்துார் அருகே, வடசென்னிமலையை சேர்ந்தவர் செல்வராஜ், 54. இவர், அதே பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கல்லுாரியில், முதல்வராக பணிபுரிகிறார். இவரது மனைவி சித்ரா, அதே கல்லுாரியில், கவுரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த, 23ல், வீட்டை பூட்டிவிட்டு தலைவாசல் அருகே, பெரியேரிக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். 25ல், வீட்டிற்கு வந்தபோது, பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த, பணம், நகை திருடி சென்றது தெரியவந்தது. ஆத்துார் ஊரக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து, செல்வராஜின் வீடு, வடசென்னிமலை சாலை பகுதிகளில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகள் குறித்து நேற்று விசாரணை நடத்தினர்.இதுகுறித்து, போலீசார் கூறுகையில், 'அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 25 பவுன் திருடி சென்றுள்ளனர். இவரது வீட்டில் 'சிசிடிவி' கேமரா இல்லாததால், அருகில் உள்ள வீட்டில் இருந்த கேமரா ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கைரேகை குழுவினர், நான்கு கை ரேகை பதிவுகள் இருந்ததை, பதிவு செய்துள்ளனர். சாலை பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது,' என்றனர்.