78 ஆம்னி பஸ் மீது வழக்குப்பதிவு
சேலம், தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க, சேலம் மேட்டுப்பட்டி, தொப்பூர் சுங்கச்சாவடிகளில், 8 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழுவினர், சுழற்சி முறையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 17, இரவு 8:00 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை, 8:00 மணி வரை என, 12 மணி நேர தொடர் சோதனை, நேற்று மூன்றாவது நாளாக நடந்தது. அதன்படி கடந்த மூன்று நாளில், 463 ஆம்னி பஸ்களை சோதனைக்கு உட்படுத்தினர். அதில் அதிக கட்டணம் வசூலித்த, 78 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு பதிந்து, 1.35 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 40,500 ரூபாய் உடனடியாக வசூலிக்கப்பட்டது. அது தவிர சாலை வரி, 6.30 லட்ச ரூபாய் வசூலானது என்றும், வரும் 23 வரை ஆம்னி பஸ்களில் சோதனை தொடரும் என, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.