தென்பெண்ணை ஆற்றில் பொங்கும் ரசாயன நுரை - விவசாயிகள் கவலை
ஓசூர்:ஓசூரில், தென்பெண்ணை ஆறு மற்றும் கெலவரப்பள்ளி அணையின் வலது, இடது பாசன கால்வாயில் நேற்று ரசாயன நுரை பெருக்கெடுத்ததால், விவசாயிகள் கவலையடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணை உள்ளது. கர்நாடகாவில் கனமழையின் போது, தென்பெண்ணையாற்றில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை கழிவு நீரை சுத்திகரிக்காமல் திறந்து விடுகின்றனர். தென்பெண்ணையாற்று நீரை, கெலவரப்பள்ளி அணையில் தேங்கி, உபரி நீரை ஆற்றில் திறக்கும் போது, அதனால் ரசாயன நுரை ஏற்படுகிறது.கர்நாடகாவில் போதிய மழை இல்லாததால், கடந்த சில மாதமாக, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு குறைந்தளவே நீர்வரத்து இருந்தது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு, 290.83 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில், 202.63 கன அடி, வலது, இடது கால்வாயில் பாசனத்திற்கு, 88 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.அணையிலிருந்து மணல் போக்கி மதகு வழியாக தண்ணீர் திறந்த நிலையில், தென்பெண்ணையாறு மற்றும் பாசன கால்வாய்களில் நேற்று பல அடி உயரத்திற்கு ரசாயன நுரை பெருக்கெடுத்தது. கடும் துர்நாற்றம் வீசிய நீரை பாசனத்திற்கு பயன்படுத்த விவசாயிகள் தயக்கம் காட்டினர்.கெலவரப்பள்ளி அணைக்கு ரசாயனம் கலந்த நீர் வருவதை தடுக்க முடியாமல், தமிழக அரசு தடுமாறி வருகிறது. தமிழக அமைச்சர், மத்திய குழு மற்றும் தமிழக அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியும், கர்நாடகாவிலிருந்து வரும் ரசாயன நீரை தடுக்க முடியவில்லை என, விவசாயிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.