தரக்குறைவாக பேசும் மேற்பார்வையாளர் முற்றுகையிட்ட ஒப்பந்த பணியாளர்கள்
ஆத்துார் தனியார் நிறுவன ஒப்பந்த மேற்பார்வையாளர், தரக்குறைவாக பேசுவதாக கூறி, நகராட்சி அலுவலகத்தை, ஒப்பந்த பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.சேலம் மாவட்டம் ஆத்துார் நகராட்சியில், 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உள்ளனர். அதில் ஒப்பந்த பணியாளர் சுபாஷ், பேட்டரி வாகனம் பழுதாக உள்ளதால் சரிசெய்து வழங்கும்படி, தனியார் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர் அருணிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், தகாத முறையிலும், தரக்குறைவாகவும் பேசி திட்டியுள்ளார். இதை அறிந்த சக பணியாளர்கள், நேற்று காலை, 8:00 மணிக்கு, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சுகாதார அலுவலர் பழனிசாமி, பேச்சு நடத்தினார். அப்போது துாய்மை பணியாளர்கள், 'மேற்பார்வையாளர் அருண், ஒப்பந்த பணியாளர்களை தரக்குறைவாக பேசுவதை தொடர்ந்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். அதற்கு சுகாதார அலுவலர், 'கமிஷனரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார். இதனால், ஒரு மணி நேரத்துக்கு பின், ஒப்பந்த பணியாளர்கள் பணிக்கு சென்றனர்.