வி.ஐ.பி.,க்களை வரவேற்க அரசுப்பள்ளி மாணவர்களை அழைத்ததால் சர்ச்சை
கெங்கவல்லி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. அங்கு, 17 வகை நோய்களுக்கு சிகிச்சை, பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் சிறப்பு அழைப்பாளர்களை வரவேற்க, பள்ளி நுழைவு பகுதி இருபுறமும், 'ரோஜா' பூக்களுடன் மாணவர்கள் நிற்க வைக்கப்பட்டனர். அரை மணி நேரத்துக்கு மேல், சீருடையில் மாணவர்களை நிற்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதுகுறித்து மக்கள், சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீருக்கு, புகார் அளித்தனர். பின் அவர் அறிவுறுத்தல்படி, மாணவர்களை, தலைமை ஆசிரியர் சாமுவேல், வகுப்பறைக்கு அனுப்பினார். பின், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, எம்.பி.,க்கள் சிவலிங்கம், மலையரசன், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை உள்ளிட்டோர், மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை, பரிசோதனை செய்தனர்.