உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருந்து தெளிக்கும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் கூட ஊழல்

மருந்து தெளிக்கும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் கூட ஊழல்

மேட்டூர்: நகராட்சியில், கொசு மருந்து தெளிக்கும் ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் முறைகேடு நடக்கிறது என, தி.மு.க., கவுன்சிலர் இளங்கோ குற்றம்சாட்டினார்.சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் சந்திரா (தி.மு.க.,) தலைமையில் நேற்று நடந்தது. இதில், தி.மு.க., 13, அ.தி.மு.க., 4, வி.சி.,1 என, 18 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:இளங்கோ (தி.மு.க.,): மேட்டூர் நகராட்சியில், டெங்கு கொசு ஒழிப்பதற்காக மருந்து தெளிக்கும் ஊழியர்களை நியமிப்பதிலும், அவர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் முறைகேடு நடக்கிறது. ஊழியர் பட்டியலை வழங்க வேண்டும்.ஈஸ்வரி (தி.மு.க.,): தியேட்டர் அருகிலுள்ள மீன் கடையை அகற்ற பலமுறை மனு கொடுத்தும் அகற்றப்படவில்லை.கீதா (தி.மு.க.,): எனது வார்டில் கால்வாய் கரையோரம் வசிக்கும் மக்கள், கழிப்பிடம் இன்றி வெட்ட வெளியில் செல்கின்றனர். அப்பகுதியில், கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிருஷ்ணன் (அ.தி.மு.க.,): மேட்டூர் புதிய பஸ் ஸ்டாண்டில், 69 கடைகள் கட்டப்படுகிறது. அதற்கான வைப்புதொகை, வாடகை முன்பை விட, ஆறு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆணையாளர் நித்யா: மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு வரும், 27ல் பொது ஏலம் விடப்படுகிறது. வைப்பு தொகை, வாடகையை பொதுப்பணித்துறை, சார்-பதிவு துறை நிர்ணயம் செய்கிறது. அதை குறைக்க வேண்டும் என்றால், நான்கு முறை நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால், 10 சதவீதம் குறைக்கலாம். அதன் பின்பும் ஏலம் எடுக்காத பட்சத்தில் வைப்புதொகை, வாடகை குறைக்க கோரி நகராட்சி நிர்வாக மண்டல ஆணையாளருக்கு தெரிவிக்கப்படும். ஆணையாளர் குழு அமைத்து வாடகையை குறைக்க நடவடிக்கை எடுப்பார்.இவ்வாறு விவாதம் நடந்தது.

அ.தி.மு.க., வெளிநடப்பு

பஸ் ஸ்டாண்ட் கடைகளின் வைப்பு தொகை, வாடகை குறைக்ககோரி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையாளர் நித்யா, தலைவர் சந்திராவிடம் மனு அளித்தனர். பின்பு வாடகை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை