உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., - தலைவியின் கணவர் பதில் அளிப்பு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்

தி.மு.க., - தலைவியின் கணவர் பதில் அளிப்பு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்

கெங்கவல்லி, டவுன் பஞ்சாயத்து கூட்டத்தில் கவுன்சிலர் எழுப்பிய கேள்விக்கு, தி.மு.க.,வை சேர்ந்த, தலைவியின் கணவர் பதில் அளித்ததால், மற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி கவிதா தலைமை வகித்தார். 37 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த விவாதம்:தி.மு.க., கவுன்சிலர்கள் நடராஜ், கலியவரதன்: குழாய் அமைத்தல் தொடர்பாக, 8.30 லட்சம் ரூபாய்க்கு தீர்மானம் உள்ளது. ஏற்கனவே செய்த பணிக்கு எத்தனை முறை தீர்மானம் கொண்டு வருவீர்கள். ஏற்க இயலாது.காங்., கவுன்சிலர் திருச்செல்வன்: முறைகேடாக போடப்பட்டுள்ள இணைப்புகளுக்கு வரி செலுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., கவுன்சிலர் வரதராஜ்: கணினி பராமரிப்பு செலவு என, அடிக்கடி 'பில்' கொண்டு வருகிறீர்கள். என்ன பராமரிப்பு என குறிப்பிட வேண்டும். வாகனங்களுக்கு டீசல் செலவும் அதிகமாக உள்ளது. அப்போது தலைவியின் கணவரான, தி.மு.க., கவுன்சிலர் ராஜா, 'செலவுகளுக்கு பில் உள்ளது' என, பதில் அளித்தார். அதற்கு, தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, 'தலைவி பதில் அளிக்காமல், கணவர் எதற்கு பதில் அளிக்க வேண்டும்' என கேட்டு வாக்குவாதம் செய்தனர்.செயல் அலுவலர் ஜெசிமாபானு, கவுன்சிலர்களை சமாதானப்படுத்தினார். பின் அவர், 'கவுன்சிலர்களின் புகார் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.'தீர்மானத்தை ஏற்கவில்லை'இந்நிலையில் கடந்த ஏப்ரலில், தி.மு.க.,வில், 3 பேர், காங்., கட்சியில் ஒருவரை, 'சஸ்பெண்ட்' செய்து, தலைவி உத்தரவிட்டார். இதுதொடர்பான நீதிமன்ற வழக்குக்கு, 30,000 ரூபாய் செலவு விபரம் வாசிக்கப்பட்டது. அதற்கு, தி.மு.க., கவுன்சிலர்கள், 'தலைவியின் நடவடிக்கைக்கு, அரசு பணத்தை செலவிடக்கூடாது' என்றனர்.அதற்கு ஜெசிமாபானு, 'இந்த தீர்மானத்தை ஏற்கவில்லை' என்றார்.தொடர்ந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புவனேஸ்வரி, சந்திரா, ''எங்கள் வார்டுகளுக்கு, அடிப்படை பணி மேற்கொள்ளவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. குழாய் சரிபார்ப்புக்கு கூட சொந்த செலவில் செய்ய வேண்டியுள்ளது,'' என்றனர்.ஜெசிமாபானு, ''கோரிக்கை, பிரச்னைகளை எழுதி கொடுங்கள். ஆய்வு செய்து தீர்வு காணப்படும்,'' என்றார். இதையடுத்து கூட்டம் முடிந்தது.போலீஸ் பாதுகாப்புகடந்த பிப்., 27ல் நடந்த கூட்டத்தின்போது, கவுன்சிலர்கள் இடையே பிரச்னை எழுந்து, ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் பாட்டில்களை வீசினர். இந்த விவகாரத்தில், 4 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற பின், சஸ்பெண்ட் நீக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நடந்த கூட்டத்துக்கு, ஜெசிமாபானு மூலம் தம்மம்பட்டி போலீசில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருந்தனர். அதன்படி காலை, 11:00 முதல், மதியம், 3:15 மணி வரை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ