ஊராட்சிகளில் தி.மு.க.,வினர் அதிகாரம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
அயோத்தியாப்பட்டணம், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., சித்ரா, நேற்று, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்தில், பி.டி.ஓ.,க்கள் திருவேரங்கன், குணலட்சுமியிடம், புகார் மனு அளித்தார்.இதுகுறித்து சித்ரா கூறியதாவது: அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் மாசிநாயக்கன்பட்டி, சுக்கம்பட்டி, வெள்ளாளகுண்டம், மேட்டுப்பட்டி உள்பட, 17 ஊராட்சிகளில் உள்ள அதன் அலுவலகங்களில், தலைவர் நாற்காலியில், தி.மு.க.,வினர் அமர்ந்து கொண்டு அதிகாரம் செய்கின்றனர். அதேபோல் எந்த நேரமும், பி.டி.ஓ., அலுவலகத்தில், தி.மு.க.,வினர் அமர்ந்திருக்கின்றனர். அரசு அலுவலர்கள், கட்சி பாரபட்சமின்றி நடுநிலையாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக வெள்ளாளகுண்டம் ஊராட்சியில், ஏற்காடு தொகுதி நிதியில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. அதில் எம்.எல்.ஏ., சித்ரா, பணியை தொடங்கி வைத்தார். அ.தி.மு.க.,வின், அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய செயலர் ராஜசேகரன், சேலம் புறநகர் மாவட்ட, எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலர் அருண்குமார், அம்மா பேரவை இணை செயலர் ஹரி உள்பட பலர் பங்கேற்றனர்.