2026ல் தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட இருக்காது
ஆத்துார், தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்டம் இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில், ஆத்துாரில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பாசறை மாவட்ட செயலர் ராஜராஜசோழன் தலைமை வகித்தார்.அதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:பா.ஜ.,வுடன் பயத்தில் கூட்டணி வைக்கவில்லை; இ.பி.எஸ்., பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவரது சுற்றுப்பயணத்தில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவை பார்ப்பது போல், லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர்.முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து, தி.மு.க., - எம்.பி., சிவா தவறான கருத்து கூறியபோதும், ஸ்டாலின் கண்டிக்கவில்லை. காமராஜரின் உருவத்தையும், எம்.ஜி.ஆரையும் கருணாநிதி கேலி செய்த நிலையில், அவரது மகன் ஆட்சி எப்படி இருக்கும்? 4 ஆண்டுக்கு பின், மகளிர் உரிமைத்தொகைக்கு கணக்கு எடுத்து எந்த பயனும் இல்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, தமிழகத்துக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்படும்; செயற்கை பஞ்சம், சட்டம், ஒழுங்கு பிரச்னை வரும். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஊழல் செய்த அமைச்சர், அதிகாரிகள் சிறைக்கு செல்வர். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியுடன், பெரிய கட்சி வருவதாக, இ.பி.எஸ்., கூறிய பின், ஸ்டாலின் பயத்தில் பேசுகிறார். 10 சீட்டுக்கு மேல், தி.மு.க., வராது; அ.தி.மு.க., 220 சீட்டுகள் பெறும். 2011 போன்று, 2026ல், தி.மு.க., எதிர்க்கட்சியாக கூட இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், பாசறை மாநில செயலர் பரமசிவம், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.