விழாவில் காளி வேடமிட்ட
சேலம்:மயான கொள்ளை விழாவில் காளி வேடமிட்ட மருளாளிகள், ஆடு, கோழிகளை கடித்தபடி, ஊர்வலமாக சென்று, தரையில் படுத்திருந்த பக்தர்களை தாண்டி, அருளாசி வழங்கினர்.மகா சிவராத்திரி விழாவுக்கு அடுத்து வரும் அமாவாசையில், சேலத்தில் மயான கொள்ளை திருவிழா நடக்கிறது. இதற்கு, 15 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் விரதம் இருந்து, பூஜை நடத்தி வந்தனர். சிவராத்திரியான நேற்று முன்தினம் இரவு, விடிய விடிய அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.காளி வேடமிட்ட மருளாளிகள் என அழைக்கப்படும் பக்தர்கள், ஆக்ரோஷமாக சப்தமிட்டபடி, மக்களுக்கு ஆசி வழங்கியபடி வந்தனர். குறிப்பாக பக்தர்கள் மற்றும் குழந்தைகள், கடவுள் வேடம் அணிந்து, எலும்பு கூடுகளை மாலையாக அணிந்து ஊர்வலமாக வந்தனர். அப்போது பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கோழி, ஆடுகளை உயிருடன் கடித்தபடி, ரத்தம் வழிய வழிய நடந்து சென்றனர். ஊர்வலமாக வந்த பாதைகளில் ஏராளமான பக்தர்கள், நோய் நொடி, திருமண தோஷம் நீங்க, குழந்தை வரம் வேண்டி, தரையில் வரிசையாக படுத்திருந்தனர். அவர்களை தாண்டி சென்று, மருளாளிகள் அருளாசி வழங்கினர்.மேலும் அங்காளம்மன் சுவாமி சிலைகளை ஊர்வலமாக, காக்காயன் சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்றனர். அங்கு பல பகுதிகளில் மயான கொள்ளை பூஜை நடத்தி வழிபட்டனர். ஆடு, கோழிகளை கடித்து, ரத்தத்தை மக்கள் மீது தீர்த்தமாக வீசினர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அச்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. அதேபோல் சீலநாயக்கன்பட்டி, கன்னங்குறிச்சி, சின்னதிருப்பதி, செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி சுடுகாடுகளிலும் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அங்காள பரமேஸ்வரி கெங்கவல்லி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை தேர் திருவிழா நேற்று நடந்தது. சுவேத நதிக்கரையில் அம்மனுக்கு ரத்த சாதம் படையல் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. குழந்தையற்ற பெண்கள் வாங்கி சாப்பிட்டனர். இதனால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து ஊர்வலமாக வந்த பக்தர்கள், குட்டி ஆடுகள், கோழிகளை கடித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த ஊர்வலம் சுவேத நதியில் இருந்து, கெங்கவல்லி, கடைவீதியை கடந்து, கோவிலை அடைந்தது. தேரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஓமலுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழாவை ஒட்டி, நேற்று சரபங்கா நதியில் இருந்து சக்தி கரக ஊர்வலம் கோவிலை நோக்கி வந்தது. மதியம், அம்மன் அகோர கோரத்துடன் மயான சூறை நிகழ்வு தொடங்கி, மாலையில் கோவிலை அடைந்தது.