அரசு பஸ் மீது கார் உரசியதில் தகராறு டிரைவர், வக்கீல் இடையே மோதல்
இடைப்பாடி, இடைப்பாடியில், அரசு பஸ் மீது கார் உரசியதில் டிரைவரும், கார் ஓட்டுனரும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சேலம் மாவட்டம், இடைப்பாடி, தாவாந்தெருவை சேர்ந்த சிவலிங்கம், 49, அரசு போக்குவரத்து கழக இடைப்பாடி கிளையில் டிரைவராக பணிபுரிகிறார். இவர் நேற்று மதியம், 12:00 மணிக்கு இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோபிசெட்டிபாளையம் செல்வதற்காக அரசு பஸ்சை ஓட்டி வந்துள்ளார். அப்போது, பின்புறமாக வந்த மாருதி ஷிப்ட் கார், பஸ் மீது உரசியது.கொங்கணாபுரம் அருகே குரும்பப்பட்டியை சேர்ந்த, சட்டப்படிப்பை கடந்தாண்டு முடித்துள்ள ஜவகர், 23, என்பவர் தன் தாய் கலைச்செல்வியுடன் காரில் வந்துள்ளார். இந்நிலையில் பஸ் டிரைவர் சிவலிங்கம், வக்கீல் ஜவகர் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதில் பஸ் டிரைவர் சிவலிங்கத்திற்கு தலையில் ரத்தகாயம் ஏற்பட்டு, தையல் போடப்பட்டு இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உள்காயம் ஏற்பட்டதாக கூறி, அதே அரசு மருத்துவமனையில் வக்கீல் ஜவகர் சிகிச்சை பெற்று வருகிறார்.இருவரின் தகராறால், இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அரைமணி நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜவகரின் தந்தை சத்தியன், சென்னை புழல் சிறையில் உதவி ஆணையாளராக பணிபுரிந்து வருகிறார்.இடைப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.