போதை மீட்பு மறுவாழ்வு மையம்; அரசு மருத்துவமனையில் திறப்பு
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை, வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஸ்டாலின், நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து மருத்துவமனையில் நடந்த விழாவில், கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஏற்கனவே, 10 படுக்கைகளுடன் போதை சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. தற்போது முதல்வர் தொடங்கி வைத்துள்ள, இந்த மையம் மூலம் போதை பழக்கத்துக்கு ஆட்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, அவர்கள் முழுதும் அந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வரவும், மீண்டும் அந்த பழக்கத்துக்கு செல்லாமல், குடும்பத்துக்கு தேவையான வருவாய் ஈட்டுவோராக மாற்ற, உளவியல் சிகிச்சை உள்ளிட்ட அனைத்தையும் வழங்கும் மையமாக விளங்கும்.இங்கு உள்ளரங்க விளையாட்டு வசதி, யோகா போன்ற மாற்று பயிற்சி முறைகள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள், சிறுவர், சிறுமியர் போதை பழக்கத்துக்கு ஆட்பட்டிருந்தால், அவர்கள் தங்கி சிகிச்சை பெற வசதிகள் உள்ளன. குறிப்பாக அனைத்து நாட்களிலும், மையம் செயல்படும். இவ்வாறு அவர் பேசினார்.மேயர் ராமச்சந்திரன், மருத்துவமனை டீன் தேவிமீனாள், சுகாதார பணி துணை இயக்குனர் சவுண்டம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.