தி.மு.க., நிர்வாகி பார் அருகே மது விற்ற முதியவர் சிக்கினார்
வாழப்பாடி: வாழப்பாடி, புதுப்பாளையத்தில், தம்மம்பட்டி நெடுஞ்சாலையோரம் இரு டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதன் அருகே, தி.மு.க., நிர்வாகி செந்தில்குமார், அரசு அனுமதி பெற்று, 'பார்' நடத்துகிறார். அங்கு கடந்த, 15ல் வாழப்பாடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையில் போலீசார், சோதனை மேற்கொண்டு, சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட, வாழப்பாடி, அய்யாகவுண்டர் தெருவை சேர்ந்த மணிகண்டன், 32, என்பவரை கைது செய்து, 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு, நேற்று காலை வாழப்பாடி போலீசார் சோதனை மேற்கொண்டபோது, அந்த பார் அருகே, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, வாழப்பாடி, புதுப்பாளையம், பெரியசாமி தெருவை சேர்ந்த இளங்கோ, 50, என்பவரை கைது செய்து, அவரிடம், 48 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.