சாலையோரம் விழுந்த மூதாட்டி பலி
கெங்கவல்லி, தம்மம்பட்டியில், சாலையோரம் விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.ஆத்துார் அருகே, சொக்கநாதபுரம் ஊராட்சி, மோட்டூர் பகுதியை சேர்ந்த ராமசாமி மனைவி சின்னப்பிள்ளை, 68. சில மாதங்களாக, மனநலம் பாதித்த நிலையில் இருந்த இவர், ஒரு வாரத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கடந்த, 16 மாலை, 6:00 மணியளவில், தம்மம்பட்டி, உடையார்பாளையம் பகுதியில் சாலையோரம் கீழே விழுந்த மூதாட்டி மயங்கிய நிலையில் இருந்தார். அப்பகுதி மக்கள் மீட்டு, தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். அடையாளம் தெரியாதததால், சேலம் அரசு மருத்துவமனை உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். விசாரணையில், சொக்கநாதபுரத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை என்பது தெரியவந்தது. அவரது குடும்பத்தினருக்கு நேற்று, தம்மம்பட்டி போலீசார் தகவல் அளித்து, உடலை ஒப்படைத்தனர்.