கம்பத்தில் ஏறி ஒயரை சரிசெய்த எலக்ட்ரீஷியன் பலி மின்மாற்றியை ஆன் செய்தவர் யார் என விசாரணை
கெங்கவல்லி, எலக்ட்ரீஷியன், மின் கம்பத்தில் ஏறி ஒயரை சரிசெய்துகொண்டிருந்தார். அப்போது மர்ம நபர், மின்மாற்றியை, 'ஆன்' செய்ததால், மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலியானார்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது விவசாய நிலத்தை, அதே ஊரை சேர்ந்த, செல்லமுத்து, 55, குத்தகைக்கு ஓட்டுகிறார். நேற்று காலை, 8:30 மணிக்கு கிணற்றில் தண்ணீர் எடுத்துவிட சென்றபோது மோட்டார் இயங்கவில்லை. இதனால் அவர், அதே பகுதியை சேர்ந்த, தனியார் எலக்ட்ரீஷியன் செல்லக்கண்ணு, 55, என்பவரை, மோட்டார் பழுது பார்க்க அழைத்துச்சென்றார்.அவர், மோட்டாரை பார்த்துவிட்டு, மின்சாரம் வரவில்லை என கூறினார். தொடர்ந்து அருகே உள்ள மின் மாற்றியை, 'ஆப்' செய்துவிட்டு, விவசாய மின் இணைப்பு உள்ள கம்பத்தில் ஏறி, ஒயரை சரிசெய்து கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக சென்ற ஒருவர் மின்மாற்றியை, 'ஆன்' செய்தார். இதில் கம்பத்தில் இருந்த செல்லக்கண்ணு மீது மின்சாரம் பாய்ந்தது. துடிதுடித்து உடல் கருகி இறந்த அவர், கம்பத்தில் தொங்கியபடி கிடந்தார். மின்வாரியத்துறையினர், மின்சாரத்தை துண்டித்து, கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஏணி வைத்து ஏறி கயிறு மூலம் செல்லக்கண்ணு உடலை மீட்டனர். மின்மாற்றியை, 'ஆன்' செய்தவர் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.மின்வாரியம் அலட்சியம்மின் பழுது தொடர்பான பிரச்னை குறித்து, சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் அளித்தாலும், அவர்கள் வருவதில்லை. இதனால் தனியார் எலக்ட்ரீஷியனை வரவழைத்து, மின்சார பணிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். இதில் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு கூறியதாவது:மின் கம்பத்தில் தனி நபர் ஏறி, பணி செய்யக்கூடாது. தற்போது ஒருவர் இறந்துள்ளார். இதுதொடர்பாக கெங்கவல்லி கோட்ட செயற்பொறியாளர், தெடாவூர் செயற்பொறியாளர், உதவி பொறியாளர்களிடம், 'நோட்டீஸ்' வழங்கி விளக்கம் பெறப்படும். மின் பழுது தகவல் பெற்ற பின், அங்கு பணிக்கு செல்லாதவர்கள் அல்லது தனி நபர் வைத்து பணி செய்வது கண்டறிந்தாலும் மின்வாரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழப்பு தொடர்பாக, போலீசில் புகார் அளிக்கப்படும். மின்மாற்றியை இயக்குவது உள்ளிட்டவை குறித்து, விவசாயிகள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.