மருத்துவமனையில் மாயமான இன்ஜினியர் ஓமலுாரில் மீட்பு
சேலம், கள்ளக்குறிச்சி, புது உச்சிமேடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம், 39. சிவில் இன்ஜினியரான இவர், இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து அடிபட்டு, கடந்த 11ல், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக்குழுவினர் ஏற்பாடு செய்த நிலையில், 15ல் மாயமானார். அவரது மனைவி சசிகலா புகாரின்படி, மருத்துவமனை போலீசார் தேடினர். அவரது புகைப்படம் உள்ளிட்ட விபரம் அச்சிட்ட துண்டறிக்கை, மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டு தேடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம்மாலை, 6:00 மணிக்கு ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சண்முகம் இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் மீட்டு விசாரித்தபோது, அதிக மன அழுத்தத்தால், சற்று மனநிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.