ரசாயன கழிவுடன் திருமணிமுத்தாறு விவசாயிகள் அவதி
வெண்ணந்துார் ; சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் மதியம்பட்டி வழியாக சென்று, பரமத்தி வேலுார் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த திருமணிமுத்தாற்றில், சேலம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், திருமணிமுத்தாற்றை ஒட்டியுள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் கலக்கின்றன.இதனால், மதியம்பட்டி வழியாக செல்லும் திருமணிமுத்தாற்றில், வெண்மை நிற நுரையுடன் தண்ணீர் பாய்கிறது. ரசாயன கழிவுடன் கூடிய இந்த நீரை, விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, மதியம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:திருமணிமுத்தாற்றில், தற்போது பெய்த கனமழையால் ஆற்றில் நிறைய தண்ணீர் உள்ளது. இருப்பினும், ரசாயன கழிவுகள் கலந்து நுரையுடன் ஓடுகிறது.இந்த நீரில் இருந்து ஒரு துளி கூட எங்களால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.