உணவு பொருளை பயிரிடவே அச்சம்; மலை அடிவார விவசாயிகள் விரக்தி
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் தும்பல்பட்டி, குரால்நத்தம், திப்பம்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில், ஏராளமான மலை அடிவார கிராமங்கள் உள்ளன. அங்கு முக்கிய பணப்பயிராக மரவள்ளி சாகுபடி இருந்தது. ஆண்டுதோறும் தவறாமல் மானாவாரியாகவும், நீர் பாய்ச்சியும் மரவள்ளி சாகுபடி செய்தனர். மானாவாரியாக சோளம், ராகி, தட்டை பயிர் உள்ளிட்ட தானியங்களை சாகுபடி செய்தனர். காட்டுப்பன்றிகள் படையெடுப்பால் மரவள்ளி உள்ளிட்ட உணவு பொருட்கள் சாகுபடி செய்வதை விவசாயிகள் கைவிட்டுள்ளனர்.இதுகுறித்து தும்பல்பட்டி விவசாயிகள் கூறியதாவது: இரவில் காட்டுப்பன்றிகள் வயலில் புகுந்துவிடுகின்றன. தடுக்க முயன்றால், ஆட்களை தாக்க பாய்கின்றன. மரவள்ளி, தக்காளி, மக்காச்சோளம், நெல், சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. காட்டுப்பன்றிக்கு பயந்து மரவள்ளி சாகுபடியை மறந்து விட்டோம். நெல், கரும்பு, கம்பு, சோளம் உள்ளிட்ட தானியம், தக்காளி, சுரக்காய் உள்ளிட்ட காய்கறி, பழங்கள் சாகுபடி செய்யவே முடியவில்லை. மரவள்ளிக்கு பதில் அரளி சாகுபடி செய்கிறோம். சாப்பாட்டுக்கு உணவு பொருட்கள் வெளியே காசு கொடுத்து வாங்குகிறோம். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே அத்யாவசிய உணவு பொருட்களை சாகுபடி செய்ய முடியும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.