உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழா வாண வேடிக்கையுடன் சக்தி அழைப்பு

கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழா வாண வேடிக்கையுடன் சக்தி அழைப்பு

சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி, நேற்றிரவு மேள தாளங்கள், வாண வேடிக்கையுடன் 'சக்தி அழைப்பு' ஊர்வலம் நடந்தது.சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கடந்த ஜூலை, 22ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றிரவு 'சக்தி அழைப்பு' நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க, கோவில் பூசாரியை சக்தி அழைப்பு ஊர்வலம் துவங்கும் கிச்சிபாளையத்தில் உள்ள, குலாலர் நடராஜர் பஜனை மடத்துக்கு அழைத்து சென்றனர்.அங்கு மண்ணால் செய்யப்பட்ட அம்மன் விக்கிரகத்துக்கு சிறப்பு பூஜை செய்து, பெரிய தாம்பாள தட்டில் 'சக்தி அம்மனை' வைத்து பூசாரி கையில் ஏந்தியபடி ஏராளமான பக்தர்கள் புடைசூழ மேள தாளங்கள், வாண வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.அங்கு அழைத்து வந்த அம்மனுக்கு, மூலவர் முன் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஆடி திருவிழாவில் இன்று (ஆக.,5) இரவு சக்தி கரகம் எடுத்து வரப்பட்டவுடன், 6, 7 இரண்டு நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும், 'உருளுதண்டம்' எனப்படும் அங்கப்பிரதட்சணம் ஆகியவற்றை செய்து வழிபாடு நடத்துவர்.நடப்பாண்டு ஆடி திருவிழாவில் அதாவது வரும், 8ம் தேதி காலை 9:15 மணிக்கு புதிதாக செய்யப்பட்ட மரத்தேரில், மாரியம்மன் எழுந்தருளி முதல் முறையாக திருத்தேரோட்டம் நடத்தப்படவுள்ளது. அன்று மாலை பவுர்ணமியையொட்டி, 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடக்கும். ஆக., 10 நள்ளிரவு ஊர்வலம், 11ல் மஞ்சள் நீராட்டு வைபவம், 12ல் பால்குட ஊர்வலம், அபிேஷகத்துடன் விழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி